மனித வாழ்வின் பரம இரகசியம்

மனித வாழ்வின் பரம இரகசியம்

இந்த உலகத்தில் நீங்கள் ஏன் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன என்றும் நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? இந்தப் பரம இரகசியத்தைத் திறப்பதற்கு ஆறு சாவிகள் உள்ளன.

1. தேவனின் திட்டம்

தேவன் மனிதன் மூலம் தம்மை வெளிக்காட்ட விரும்புகிறார் (ரோ. 8:29). இந்த நோக்கத்திற்காக, அவர் மனிதனைத் தம் சொந்த சாயலில் படைத்தார் (ஆதி. 1:26). ஒரு கையுறை கையை உள்ளடக்கிக்கொள்வதற்காகக் கையின் சாயலில் உருவாக்கப்படுவதுபோலவே, மனிதனும் தேவனை உள்ளடக்கிக்கொள்வதற்காக தேவனின் சாயலில் உருவாக்கப்பட்டான். தேவனைத் தன் உள்ளடக்கமாகப் பெற்றுக் கொள்வதின் மூலம், மனிதன் தேவனை வெளிக்காட்ட முடியும் (2 கொரி. 4:7).

2. மனிதன்

தம் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தேவன் மனிதனை ஒரு பாத்திரமாக உண்டாக்கினார் (ரோ. 9:21-24). இந்தப் பாத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டது: ஆவி, ஆத்துமா, சரீரம் (1 தெச. 5:23). சரீரம், பௌதிக மண்டலத்திலுள்ள பொருட்களைத் தொடர்புகொண்டு, பெற்றுக்கொள்கிறது. மனதிற்குரிய புலனாகிய ஆத்துமா, உளவியல் மண்டலத்திலுள்ள காரியங்களைத் தொடர்புகொண்டு, பெற்றுக்கொள்கிறது. மனிதனின் மிக உள்ளார்ந்த பகுதியாகிய மனித ஆவி, தேவனைத் தொடர்புகொள்வதற்காகவும், பெற்றுக்கொள்வதற்காகவும் உண்டாக்கப்பட்டது (யோவா. 4:24). வெறுமனே உணவை வயிற்றிலும், அறிவை மனதிலும் அடக்கிக்கொள்வதற்காக அல்ல, மாறாக தேவனைத் தன் ஆவியில் உள்ளடக்கிக்கொள்வதற்காக மனிதன் உண்டாக்கப்பட்டான் (எபே. 5:18).

3. மனிதனின் வீழ்ச்சி

ஆனால், மனிதன் தேவனைத் தன் ஆவிக்குள் ஜீவனாகப் பெற்றுக்கொள்வதற்கு முன், பாவம் அவனுக்குள் நுழைந்துவிட்டது (ரோ. 5:12). பாவம் அவனது ஆவியை மரிக்கச்செய்தது (எபே. 2:1), தன் மனதில் அவனை தேவனின் எதிரியாக்கியது (கொலோ. 1:21), அதோடு அவனுடைய சரீரத்தைப் பாவம்நிறைந்த மாம்சமாக தரம் இழக்கச்செய்தது (ஆதி. 6:3; ரோ. 6:12). இப்படி, பாவம் மனிதனின் மூன்று பகுதிகளையும் பழுதடையச் செய்து, அவனை தேவனுக்கு அந்நியனாக்கியது. இந்த நிலையில், மனிதன் தேவனைப் பெற்றுக்கொள்ள இயலாது.

4. தேவனின் பகிர்ந்தளித்தலுக்காக கிறிஸ்துவின் மீட்பு

இருந்தபோதிலும், தேவன் தம் ஆதி திட்டத்தை நிறைவேற்றாத படி மனிதனின் வீழ்ச்சி அவரை நிறுத்திவிடவில்லை. தம் திட்டத்தைச் செய்துமுடிப்பதற்காக, முதலில் தேவன், இயேசு கிறிஸ்து என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனானார் (யோவா. 1:1, 14). பின்பு மனிதனை மீட்க, கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (எபே. 1:7), இப்படியாக அவனுடைய பாவத்தைப் போக்கி (யோவா. 1:29), அவனை தேவனிடம் மீண்டும் கொண்டுவந்தார் (எபே. 2:13). இறுதியாக, தம் ஆராய்ந்தறிய முடியாத வளமான ஜீவனை மனிதனின் ஆவிக்குள் தாம் பகிர்ந்தளிக்கும்படி (யோவா. 20:22; 3:6), உயிர்த்தெழுதலில் அவர் ஜீவன்-தரும் ஆவி ஆனார் (1 கொரி. 15:45).

5. மனிதனின் மறுபிறப்பு

கிறிஸ்து ஜீவன்-தரும் ஆவியாக மாறியிருப்பதால், இப்பொழுது மனிதன் தேவனின் ஜீவனைத் தன் ஆவிக்குள் பெற்றுக்கொள்ள முடியும். வேதம் இதை மறுபிறப்பு என்று அழைக்கிறது (1 பேது. 1:4; யோவா. 3:3). இந்த ஜீவனைப் பெற்றுக்கொள்ள மனிதன் தேவனிடம் மனந்திரும்பி, கர்த்தர் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் (அப். 20:21; 16:31).

மறுபடி பிறப்பதற்கு, எளிமையாக, திறந்த இதயத்துடன் கர்த்தரிடம் வந்து, இப்படியாக அவரிடம் கூறுங்கள்:

கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி. நீர் எனக்குத் தேவை. எனக்காக மரித்ததற்காக உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியும். என் பாவங்கள் எல்லாவற்றிலிருந்தும் என்னைச் சுத்திகரியும். நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். இப்பொழுதே உம்மை என் இரட்சகராகவும் ஜீவனாகவும் பெற்றுக்கொள்கிறேன். எனக்குள் வாரும்! உம் ஜீவனால் என்னை நிரப்பும்! கர்த்தராகிய இயேசுவே, உம் நோக்கத்திற்காக என்னை உம்மிடம் தருகிறேன்.

6. தேவனின் முழுமையான இரட்சிப்பு

ஒரு விசுவாசி மறுபடிபிறந்தபிறகு ஞானஸ்நானம் பெற வேண்டும் (மாற்கு 16:16). பின்பு தேவன், விசுவாசிகளின் ஆவியிலிருந்து ஆத்துமாவிற்குள் தம்மையே ஜீவனாக படிப்படியாக பரப்புகின்ற வாழ்நாள் முழுவதுமான வழிமுறையை ஆரம்பிக்கிறார் (எபே. 3:17). மறுசாயலாக்கப்படுதல் (ரோ. 12:2) என்ற இந்த வழிமுறைக்கு, மனித ஒத்துழைப்பு தேவை (பிலி. 2:12). விசுவாசி, தன் எல்லா ஆசைகளும், எண்ணங்களும், தீர்மானங்களும் கிறிஸ்துவினுடையதாக மாறும் வரை தன் ஆத்துமாவிற்குள் பரவுவதற்கு கர்த்தரை அனுமதிப்பதின் மூலம் ஒத்துழைக்கிறார். இறுதியாக, கிறிஸ்து திரும்பிவரும்போது விசுவாசிகளின் சரீரத்தை தேவன் தம் ஜீவனால் முழுமையாக நிரப்புவார். இது மகிமைப்படுத்தப்படுதல் என்றழைக்கப்படுகிறது (பிலி. 3:21). ஒவ்வொரு பகுதியிலும் வெறுமையாகவும், பழுதடைந்தும் இருப்பதற்குப் பதிலாக, இந்த மனிதன் தேவனின் ஜீவனால் முழுமையாக நிரப்பப்படுகிறான். இதுவே தேவனின் முழுமையான இரட்சிப்பு! இப்படிப்பட்ட மனிதன், இப்போது தேவனை வெளிக்காட்டுகிறான், தேவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறான்!

இது, கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1 என்ற புத்தகத்திலுள்ள முதல் அதிகாரமாகும், தொடர்ந்து வாசிக்க உங்களுக்கான இலவசப் பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்