இந்த உலகம் எப்போது முடிவடையும்?

இந்த உலகம் எப்போது முடிவடையும்?

எப்போதெல்லாம் ஓர் உலகளாவிய தொற்றுநோய், பூகம்பம், சூறாவளி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உலகம் எப்போது முடிவடையும் என்று மக்கள் வியக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வி, இதைப் புறக்கணிக்க முடியாது. சிலர் மரிக்க பயப்படுவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். மற்றவர்கள் நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி பயப்படுகிறார்கள், இன்னும் சிலர், நாம் இருக்கும் இந்த அசிங்கமான குழப்பத்தை தேவன் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், மனிதன் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும்படி அவருடைய அன்பு மற்றும் நீதியின் இராஜ்ஜியத்தை அவர் கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்நோக்குகிறார்கள்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தகுதியுள்ள ஒரே அதிகாரியான தேவன், தம் உண்மையுள்ள தீர்க்கதரிசிகள் மூலம் பேசியுள்ளார், அவருடைய பேச்சு எழுதப்பட்டு ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது, அதுதான் வேதாகமம் (மத்தேயு 24:36). இங்கே நாம் இந்தக் கேள்விக்கு வேதாகமத்தின்படி பதிலளித்து, தற்போதைய உலகம் எவ்வாறு முடிவடையும் என்பதைப் பார்ப்போம்.

தேவனின் சிருஷ்டிப்பின் குறிக்கோள்

வானமும் பூமியும் எப்போது முடிவடையும் என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பு, தேவன் அவற்றை ஏன் சிருஷ்டித்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தம் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு, ஜீவனாக தம்மையே கொண்டு நிரப்பப்பட்டு, தம்மை வெளிக்காட்டவும், பூமி முழுவதையும் தமக்காக ஆட்சிசெய்வதற்கும் ஒரு கூட்டு மனிதனாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு கூட்ட மக்களைப் பெறுவதே சிருஷ்டிப்பில் தேவனின் குறிக்கோள் (ஆதியாகமம் 1:26). இந்தக் கூட்டு மனிதன் கட்டியெழுப்பப்படாமல் உலகம் முடிவுக்கு வராது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது (எபேசியர் 4:12). தேவன் இன்னும் இந்தத் தலைசிறந்த சிருஷ்டிப்பை உருவாக்கி வருகிறார், நீங்களும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியும் (எபேசியர் 2:10).

பூமி தீர்ந்துகொண்டிருக்கிறது

பிரபஞ்சம் நம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. தற்போதைய மதிப்பீட்டின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிருஷ்டிக்கப்பட்டது. தேவன் மனிதனை சிருஷ்டித்ததிலிருந்தே, மனிதன் பூமியின் வளங்களைப் பயன்படுத்திவருகிறான். கடந்த நூற்றாண்டில், இந்த வளங்களை மனிதன் நுகரும் அளவு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, இந்த வளங்கள் விரைவாகக் குறைந்து வருகின்றன. இந்த வளங்களைப் பயன்படுத்துவது, தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், ஓரளவு நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய எண்ணெய் இருப்பு அடுத்த நூற்றாண்டு வரை நீடிக்காது. ஓசோன் படலத்தில் உள்ள துவாரங்கள், தோல் புற்றுநோயின் நிகழ்வுகளைப் பிரம்மிக்கத்தக்க விதத்தில் அதிகரிக்கக் கூடும். வளிமண்டலத்தில் பைங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) அதிகரித்து வருகின்றன, எனவே பூமி வெப்பமடைந்து வருகிறது, வானிலை முறைகள் மாறிவருகின்றன, வறட்சி, காட்டுத் தீ, மற்றும் வெள்ளங்கள் அதிகரித்துவருகின்றன. சூறாவளி, புயல் போன்ற, தீவிர-வானிலை காரணமான நிகழ்வுகள் அடிக்கடியும் அதிகதிகக் கடுமையாகவும் அதிகரித்து வருகின்றன. காடுகள் அழிந்து வருகின்றன; வனவிலங்குகளுக்கு குறைந்த வாழ்விடமும், பிராணவாயுவை உருவாக்க குறைந்த தாவரங்களுமே இருக்கும். கடல் மட்டம் உயர்ந்து, கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கடலோர நிலங்களை அபகரித்துவருகின்றது. நிலத்தடிநீர் அளவு குறைந்து வருகிறது, இதனால் மிகவும் தேவைப்படும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. விநியோகிக்கப்படும் நமது குடிநீரிலும் கடலிலும் வேதியியல் மற்றும் அணுக்கழிவுகள் கலந்துவருகின்றன. ஒவ்வொரு நொடியும் காற்று மாசுபட்டு வருகிறது, இதனால் பல நகர்ப்புறங்களில் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உலக மக்கள் தொகை அதிவேகமாக உயர்ந்துவருகிறது. நம் அல்லது நம் குழந்தைகளின் வாழ்நாளில் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தேவை விளைச்சலை அதிகமாகக் கூடும். ஒரு பெரிய அணு ஆயுதப் போர் இல்லாமல் கூட, 30 முதல் 50 ஆண்டுகளில் பூமி இன்று நாம் வாழும் பூமியைப் போல் இருக்காது. ஒரு நாள் பூமியின் பயன் முடிந்துவிடும், அது எரிக்கப்பட வேண்டிய பழைய ஆடையைப் போல சுருட்டப்படும் என்று வேதாகமம் சொல்கிறது (எபிரெயர் 1:10-12; 2 பேதுரு 3:12).

உலக முடிவுக்கு வழிவகுக்கும் நாட்கள்

உலகம் எப்போது முடிவடையும் என்று வேதாகமம் கூறவில்லை. அந்த மணி நேரமோ நாளோ நமக்குத் தெரியாது (மத்தேயு 25:13), ஆனால் உலகத்தை முடிவை நோக்கிக் கொண்டு செல்லும் நாட்கள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி வேதாகமம் நமக்குத் தெரிவிக்கிறது. கடைசி நாட்களில், யுத்தங்கள், யுத்தங்களைக் குறித்த வதந்திகள், பஞ்சங்கள், மற்றும் பூகம்பங்கள் நிகழும் (மத்தேயு 24:6-7). கடைசி நாட்களில், சட்டதிட்டம் இல்லாமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும் (மத்தேயு 24:12). தேவன் மீதும் மற்றவர்கள் மீதுமான பலரின் அன்பு தணிந்து போகும் (மத்தேயு 24:12). வாழ்க்கை பல மனஉளைச்சல்களால் நிரம்பியிருக்கும், இவற்றின் காரணமாக, மக்கள் இந்தக் கவலைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்க எல்லா வகையான தீயொழுக்கத்திலும், குடிப்பழக்கத்திலும் அதிகதிகமாகப் பங்கேற்பார்கள் (லூக்கா 21:34). உலகின் இறுதி வரை ஓடும் நான்கு குதிரைகளின் ஒரு பந்தயத்தின் சித்திரத்தையும் வேதாகமம் தருகிறது (வெளிப்படுத்தல் 6:1-8). இந்த நான்கு குதிரைகள் சுவிசேஷம், யுத்தம், பஞ்சம், மரணம் ஆகியவையே. இந்தப் பந்தயம் தொடரும், மேலும் தீவிரமடையும். இவை எதுவும் இல்லாமல் போகாது, காரியங்கள் மேம்படும் என்று நாம் நம்புகிறோம், ஆனால் அவை மேம்படாது, ஆனால் அவ்வளவாய் அவை மோசமடையும்.

உலகம் முடிவுக்கு வரும் விதம்

ஆயினும், உலகம் எப்படி முடிவுக்கு வரும் என்பதை வேதாகமம் சொல்கிறது. அதன் முக்கியமான குறிப்புகள் இங்கே. உலகத்தின் முடிவுக்கு முந்தைய ஏழு ஆண்டுகள் தலா மூன்றரை ஆண்டுகள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்றரை ஆண்டுகள் சமாதானமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தின் முடிவில், தேவன் தம்மையே ஜீவனாகக் கொண்ட ஒரு கூட்டு மனிதனை உருவாக்கும் பணியை முடித்திருப்பார் (வெளிப்படுத்தல் 12: 5). இவர்கள் ஜெயங்கொண்டவர்கள். அதன் பின்னர் அவர் அவர்களைப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்வார். அங்கே அவர்கள் பிசாசாகிய சாத்தானைத் தோற்கடித்து அவனை பூமிக்குத் தள்ளுவார்கள் (வெளிப்படுத்தல் 12:9-11; 14:1). பின்னர் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படும் ஒரு பொல்லாத மனிதனுக்குள் ஒரு அசுத்த ஆவி நுழையும், சாத்தான் தன் வல்லமையை அவனுக்குக் கொடுப்பான் (வெளிப்படுத்தல் 13:2). இது உலகத்தின் கடைசி மூன்றரை ஆண்டுகளில் தொடங்கும். இந்தக் காலத்தை வேதாகமம் மகா உபத்திரவம் என்று அழைக்கிறது (மத்தேயு 24:11). அந்த நேரத்தில் பூமி யாரும் வாழ விரும்பும் இடமாக இருக்காது (வெளிப்படுத்தல் 3:10). அந்திக்கிறிஸ்து மனிதகுலத்திற்கு மிகவும் சேதம் விளைவிப்பான், அதே நேரத்தில், பல இயற்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பேரழிவுகள் ஏற்படும் (வெளிப்படுத்தல் 11:13). இறுதி மூன்றரை ஆண்டுகளின் முடிவில், கிறிஸ்துவும் அவருடைய ஜெயங்கொண்டவர்களும் பரலோகத்திலிருந்து இறங்கி, அந்திக்கிறிஸ்துவையும் அவனுடைய சேனையையும் அர்மகெதோன் என்ற இடத்தில் நசுக்குவார்கள் (வெளிப்படுத்தல் 16:16; 19:13-16; 17:14). பின்னர் தேவனுடைய இராஜ்ஜியம் பூமிக்குக் கொண்டுவரப்படும், சாத்தான் ஆயிரம் ஆண்டுகள் சிறைவைக்கப்படுவான் (வெளிப்படுத்தல் 20:2). ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், சாத்தான் சிறிது காலம் விடுவிக்கப்படுவான். அப்போது அவன் அதிக சேதம் ஏற்படுத்துவான், ஆனால் அதன் பின்னர் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் (வெளிப்படுத்தல் 19:20; 20:10). சாத்தானும் அவனுடன் ஒத்துழைத்தவர்கள் அனைவரும் அங்கே என்றென்றும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஆனால் தேவனிடம் திரும்பும் மக்களும், தேவனால் நிரப்பப்படுவதற்குத் தங்களையே திறப்பவர்களும், தேவனிலும் தேவனோடும், புதுப்பிக்கப்பட்ட பூமியில் நித்திய காலமாக வாழ்வார்கள் (வெளிப்படுத்தல் 11:15). அங்கு மகிழ்ச்சியும், சமாதானமும், நீதியும் இருக்கும் (வெளிப்படுத்தல் 22:3,5). அதன் பிறகு கண்ணீரோ, பற்றாக்குறையோ, நோயோ, திருட்டோ, அநீதியோ, மரணமோ இருக்காது (வெளிப்படுத்தல் 21:3-4).

உலகத்தின் முடிவில் மகா உபத்திரவத்தின்போது வரும் பாழாக்குதலிலிருந்து நீங்கள் தப்பிக்க விரும்பினால், நீங்கள் இன்று தேவனிடம் மனந்திரும்பி, அவரையும் அவருடைய இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் (மத்தேயு 4:17; எபேசியர் 5:18-19; யோவான் 10:10). நீங்கள் சாத்தானின் சேதப்படுத்துதலிலிருந்தும் தேவனின் தீர்ப்பிலிருந்தும் தப்பிக்க விரும்பினால், பின்வருமாறு ஜெபிக்க உங்களை ஊக்குவிக்கிறோம்:

"கர்த்தராகிய இயேசுவே! என்னை சாத்தானின் இராஜ்ஜியத்திலிருந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு இடம் மாற்றும். நான் உம்மிலும் உம்மோடும் நித்தியமாக வாழ விரும்புகிறேன். என் ஜீவனாக இருக்கும்படி எனக்குள் வாரும். உம்முடைய இரட்சிப்பில் நான் பிரவேசிக்க இப்போது நீரே எனக்குத் தேவை."

தேவனையும் மனிதகுலத்திற்கான அவரது திட்டத்தையும் குறித்து மேலும் வாசிக்க, தயவுசெய்து எங்கள் வலைத்தளத்துக்கு வருகைதாருங்கள்:

https://www.rhemabooks.org/ta/articles/questions-about-god-man-and-what-is-happening-on-the-earth/


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்