என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, அவர் அழைப்புவிடுக்கும் இந்த வார்த்தைகளை அடிக்கடி பேசினார்: என்னிடம் வாருங்கள். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்.  11:28). "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்...தேவனுடைய இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது." (மாற். 10:14) "ஒருவன் தாகமாயிருந்தால், என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" (யோவா. 7:37). இளைப்பாறுதலுக்காகவும் ஜீவனுக்காகவும் தம்மிடம் வருமாறு கர்த்தர் நம்மை எப்பொழுதும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்.

நம்மைத் தம்மிடம் வரும்படி கிருபையுடன் கர்த்தர் தம் பக்கத்தில் சொல்வது மட்டுமல்ல, நம் பக்கத்தில் நாம், பெரும் சுமைகளின் கீழ் பிரயாசப்பட்டு உழைத்துக்கொண்டிருப்பதால் அவரிடம் செல்வதற்கான ஒரு தவிப்பான தேவை நமக்கு இருக்கிறது. நாம் வாழும் இந்த யுகமானது, இயற்கைப் பேரழிவுகள் பற்றிய மனஉளைச்சல், நோய்கள் மற்றும் உலகளாவிய விதத்தில் பரவும் தொற்றுநோய்கள் மற்றும் அதன் விளைவாக உண்டாகும் குழப்பத்தினால் ஏற்படும் மனஉளைச்சல், பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய மனஉளைச்சல், பொருளாதார ஸ்திரமின்மை ஏற்படுத்தும் மனஉளைச்சல் என்று இது பிரத்தியேகமாக ஒரு மனஉளைச்சல் நிறைந்த யுகமாக இருக்கிறது. நமக்கு வேலை நிலைக்குமா என்றுகூட நாம் வியந்துகொண்டிருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. நமக்குப் போதுமான உணவு மற்றும் மருந்து கிடைக்குமா என்றுகூட நாம் வியந்துகொண்டிருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. நம் குழந்தைகள் எந்த வகையான உலகத்தை சுதந்தரிப்பார்கள் என்று நாம் வியந்துகொண்டிருக்கிறோம்.  ஆ, எவ்வளவாய் நாம் இந்த அநேக சுமைகள் மற்றும் மனஉளைச்சல்களிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது!

இது மட்டுமல்லாமல், பாவப் பிரச்சனை காரணமாகவும் நாம் அவரிடம் வர வேண்டிய அவசியம் உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பரிசுத்த தேவன் இருக்கிறார் என்பதையும், நாம் ஒரு நேர்மையும் ஒழுக்கமுமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையும் நம் மனசாட்சியில் அறிந்திருக்கிறோம். ஆனால் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது—அதை நம்மால் செய்ய முடியவில்லை. நாம் அனைவரும் தேவனுக்கு விரோதமாகவும், மனிதனுக்கு விரோதமாகவும் எண்ணற்ற முறை பாவம் செய்திருக்கிறோம். எனவே, நாம் அவரிடம் வருவது எப்படி? அவரிடமாக வருவதற்கு இயேசு விதிக்கும் நிபந்தனை என்ன?

ஒரே வார்த்தையில் சொல்வதனானால்—எதுவுமில்லை! இயேசு நம்மிடம் எதையும் கோரவில்லை, ஏனென்றால் நாம் அவரிடம் வருவதற்கு அவர் ஏற்கெனவே ஒரு முழு ஏற்பாட்டைச் செய்துவைத்திருக்கிறார். வேதாகமம் கூறுகிறது, "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் (அதாவது, இயேசுவின்மேல்) விழப்பண்ணினார்"  (ஏசா. 53:6). நம் பாவங்களுக்கான முழு தண்டனையையும் அவர் சுமந்துதீர்த்துவிட்டதால் நம்மீது எந்தக் கோரிக்கையும் இல்லை. இயேசு தம் இரத்தத்தைச் சிந்தி, நம் பாவங்களையெல்லாம் நமக்காக சுமந்துத் தீர்த்துவிட்டதால், அவற்றுக்கான தண்டனை இனி நம் மீது இல்லை! அவர் நம் கடனைச் செலுத்திவிட்டார், எனவே நாம் அவரிடம் வரும்போது, நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம். பின்னர் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து ஜீவன்-தரும் ஆவியானார் (1 கொரி. 15:45) இதனால் அவர் நமக்குள் வந்து நம் உள்ளார்ந்த சமாதானமாகவும் இளைப்பாறுதலாகவும் இருக்க முடியும்.

கர்த்தராகிய இயேசு நற்செயல்களைக் கேட்கவில்லை; அவர் நற்குணத்தையும் கேட்கவில்லை; தகுதிச் சான்றுகளையும் கேட்கவில்லை— "என்னிடம் வா" என்று மட்டுமே கூறுகிறார். தம்மிடம் வருபவர்களுக்கு, அவர் நிபந்தனையற்ற வாக்குத்தத்தம் அளிக்கிறார்: "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதேயில்லை" (யோவா. 6:37). இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவரிடம் வருவதே. வருவது என்றால் என்ன? வருவது என்றால் கர்த்தரைக் கிட்டிச் சேர்வதாகும். வருவதென்றால் அவரை நோக்கிக் கூப்பிடுவதாகும். வருவதென்றால் அவருக்குள் விசுவாசித்து அவரைப் பெற்றுக்கொள்வதாகும்.

இதே கணத்தில் நீங்கள் இருக்கும்வண்ணமாகவே நீங்கள் அவரிடம் வருவதற்குக் கர்த்தர் காத்திருக்கிறார். உங்கள் தற்போதைய பாவங்களுடன் வாருங்கள். உங்கள் தற்போதைய பயங்களுடன் வாருங்கள். நீங்கள் இருக்கும்வண்ணமாகவே வாருங்கள். உங்களை மேம்படுத்தக் காத்திருக்காதீர்கள்—அந்த நாள் ஒருபோதும் வராது. நம் சார்பாக இயேசு மரித்த அவருடைய மரணம் நம்முடைய ஒவ்வொரு குறைபாட்டையும் நிரப்பிவிட்டது. காத்திருக்க வேண்டிய தேவை இல்லை—அவரிடம் வாருங்கள், அவ்வளவே. நீங்கள் அவரிடம் வந்தால், நீங்கள் இயேசுவை நம்பினால், உங்கள் இருதயத்தைத் திறந்து அவரை நோக்கிக் கூப்பிட்டால், அவர் உங்களைத் தம்மிடமாய்ப் பெற்றுக்கொள்வார். அவருடைய வாக்குத்தத்தம் என்றென்றைக்கும் உறுதியானது—"என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதேயில்லை." என்னிடம்வாருங்கள், அவ்வளவே.

கர்த்தராகிய இயேசுவே, நான் பாவம்நிறைந்தவன் என்று அறிக்கையிடுகிறேன். எனக்கு பயங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன என்று நான் அறிக்கையிடுகிறேன், ஆனால் இப்போது நான் உம்மிடம் வருகிறேன். உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் பாவங்களிலிருந்து என்னைச் சுத்திகரிக்கும்படி நான் உம்மிடம் கேட்கிறேன், நீங்கள் என்னை எந்த வகையிலும் புறம்பே தள்ளுவதில்லை என்ற உம் வாக்குத்தத்தத்தை நான் நம்புகிறேன். ஆகவே, நான் இருக்கும்வண்ணமாகவே உம்மிடம் வருகிறேன், நீர் என்னை ஏற்றுக்கொள்வீர் என்று உமது வார்த்தையிலிருந்து நான் அறிந்திருக்கிறேன். நீர் எனக்குள் வரும்படி உம்மைக் கேட்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, நீர் என் இளைப்பாறுதலாக இருக்கும்படி நான் உம்மிடம் வருகிறேன்."


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்